கவிதை

நான் எழுதிய, வாசித்த மற்றும் இரசித்த கவிதைகள்.

இன்றைய தமிழ்க் கவிதைகள்.

மேனாட்டார் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வருதல் வேண்டும் என்று பாரதி சொன்னது போய் இன்று தமிழ்க் கவிதைகள் மேனாட்டுக்கு போயிருக்கின்றன.

கலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். ( இவர் ஏலவே பதினொரு தமிழ் நாவல்கள் உட்பட பல தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்).

மிக ஆழமாக எழுதப்பட்டிருக்கின்ற முன்னுரை, தமிழ்க் கவிதை பற்றி அறியாவதர்களுக்கு கூட அவற்றை மிகச்சுருக்கமான மிகத்தெளிவான அறிமுகமாகும். அத்தோடு மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சங்கடங்கள் கஸ்டங்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன. அதில் அவர்

I have faced two major challenges in translating poetry. One in to bridge the culture gap betwwn the source language and the target language, perticularly between tamil and a non-indian language like English. The more daunting challenge is to recreate the emotional vibration and the rhythm of the original.

இந்த இரண்டாவதாக அவர் குறிப்பிட்டிருக்கின்ற பிரச்சனை சில இடங்களில் தமிழ் கவிதைகளை வாசித்த பின்னர் ஆங்கிலத்தை வாசிக்கின்ற பொழுது தெரியவருகின்றது. இருந்த போதிலும் சில கவிதைகளில் மிகச்சிறப்பாக இந்த பிரச்சனை கையாளப்பட்டுள்ளமையும் தெரிகின்றது.

மேலும் இதைப்பற்றி சொல்லும் போது இவர்

I found no sovereign formula for sucees here. There is no substitute for a constant search marked by honestly, judgement and sensitivity. I adobted as a guiding principle that there should be no violence to the cultural and emotional flavour of the original.

இந்த அவரது வழிமுறைதான் சிறப்பாக இந்தக் கவிதைகள் ஆங்கித்திற்கு சென்றுள்ளதற்கு காரணம் என்று எனக்கு படுகின்றது.

இனி உள்ளடக்கத்துக்கு வந்தால்,

இந்த தொகுப்பு சுப்பிரமணிய பாரதியாரில் இருந்து ஆரம்பித்து பாரதிதாசன், கண்ணதாசன் என்று வளர்ந்து இன்று வரை பரந்து நிற்கின்றது.நூற்றி ஆறு கவிஞர்களின் நூற்றி ஆறு கவிதைகள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கில் வெளிவரும் கவிதைகளில் இருந்து கவிதைகளை தேர்ந்தெடுத்தல் என்பது இலகுவானதன்று.

இருந்தாலும் நமக்கு மிகவும் அறிமுகமான கவிஞர்கள் சிலர் விடுபட்டது போன்றும், சில உள்ளடக்கப்பட்ட கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அவர்களின் ஆளுமையை சரியாக காட்டவில்லை என்ற எண்ணமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றது.

இந்த 106 கவிஞர்களுள், கீழ்வரும் எட்டு ஈழத்துக் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன (புத்தக ஒழுங்கிலேயே).

மகாகவி – தேரும் திங்களும்

“ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை
என்று
வந்தான் ஒருவன் ……..”
“The whole town has assembled
And is pulling the chariot
Come along
Let us also give a hand
Came that person ……..”

முருகையன் – இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு…
(இக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று)

“இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு
மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின் முதுகிற்
போட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள் பயணம்……..”
“Ours an ancient burden of two thousand years.
Bent under the load
We have embarked on a journey, long…….”

வ. ஜ. ச. ஜெயபாலன் – கடற்புறம்

“காலமகள் மணலெடுத்துக்
கோலமிட்ட கடற்புறத்திற்
ஏழை மகள் ஒருத்தி……”
“The sheshore
Time’s handiwork
A carpet of granular sand-
Stands a daughter of poverty……”

எம். ஏ. நுஃமான் – கவிதை உள்ளம்

“வெண்முகிலோடு நாமும்
மிதக்கலாம் வீசுகின்ற
தண்ணிய தென்றலூடும்
தளிர்களின் மென்மையூடும்…….”
“Let us-
Float with cotton wool clouds.
Merge and play
Like water uniting with water
with cool floating breeze……”

சு. வில்வரத்தினம் – காயம்

“காயம் பட்டவனின்
குருதி கதறிற்று
கல் எங்கிருந்து?…….”
“The blood of the wounded
Wailed
Where from this stone?….”

இளவாலை விஜயேந்திரன் – காணாமல் போன சிறுவர்கள்

“ஆலமரமிருக்கும்
கீழோ ஊஞ்சல்
ஆடிக்களிக்கவென
நீளவிழுதிருக்கும்……..”
“The mighty banyan tree
Aerial roots
As swings
To sway in glee……”

சிவரமணி – முனைப்பு

“பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தை போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்பட்டன……”
“Like a corpse
Ravaged by ghosts
I was desecrated.
Finer emotions
Vandalised
By blood-soaked hands”

உமாஜிப்ரான் – இம்சை

ஆண்மை தெறிக்கும் தேகம்
விழுங்கும் முனைப்பில்
அலைந்து மேயும் விழிகளில்
இரைதேடும்,
பசித்த புலியின் குரூர வசீகரம்…..”
“Body bursting with machismo
Roving eyes
Brimming with leahery
With the savage allure
Of a hungry tiger on prowl….”

இவர்களின் கவிதைத்தெரிவுகளும் சிற்ப்பானவையாகத்தான் இருக்கின்றன என்பது என் எண்ணம். அத்தோடு சில ஈழத்து கவிஞர்களின் பெயர்கள் விடுபட்டுப் போய்விட்டன போன்ற எண்ணமும் ஏற்படுகின்றது.

11 சித்திரை, 2008

சிறையிலிருந்து ஒரு கடிதம்

அம்மா
நண்பர்கள் என்னைத் தேடி வந்து
கதவில் தட்டும்போதெல்லாம்
நீ வெம்பிக் கண்ணீர் மல்குதை
எண்ணி நான் வேதனைப்படுகிறேன்

ஆனால்
வாழ்க்கையின் சிறப்பு
என் சிறையில் பிறக்கிறதென்று
நான் நம்புகின்றேன் அம்மா
என்னை இறுதியில் சந்திக்க வருவது
ஒரு குருட்டு வெளவாலாய்
இருக்காதென்றும் நான் நம்புகின்றேன்
அது பகலாய்த்தான் இருக்கும்
அது பகலாய்த்தான் இருக்கும்.

(எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)

26 கார்த்திகை, 2006

என்றென்றும் பல்ஸ்தீன்

பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது. உங்களின் பார்வைக்காக

மேன்மைமிகு
மேன்மை மிகு தேசமே
இருள் மிகுந்த பெருந்துயர் இரவில்
திரிகைக்கல் சுழலலாம்
மேலும் சுழலலாம்
ஆயின்உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு
அவற்றால் இயலா
அவை மிகச் சிறியன.

ஓ பெரிய தேசமே
ஓ ஆழமான காயமே
தனிப்பெரும் காதலே
நசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து
ஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து
திருடப்பட்ட உன் முறுவலில் இருந்து
திருடப்பட்ட
உன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்து
சிதைவுகளிலிருந்து
சித்திரவதைகளில் இருந்து
இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து
வாழ்வினதும் மரணத்தினதும்
நடுக்கங்களில் இருந்து
புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்.

அது எழவே செய்யும்.

21 கார்த்திகை, 2006